ஒருசமயம் கரிகாலச் சோழன் தனது படையுடன் இப்பகுதியைக் கடந்தபோது, அவனது யானைக்கு மதம் பிடித்தது. கோழி ஒன்று அவனது யானையின் மத்தகத்தைக் கொத்தி அதை அடக்கியது. ஒரு கோழி எதிர்த்து யானை பின்வாங்கியதைக் கண்ட கரிகாலன், இந்த இடத்தின் தன்மையை வியந்து இங்கேயே தங்கினான். அதனால் இப்பகுதி 'உறையூர்' என்று பெயர் பெற்றது. கோழி எதிர்த்ததால் 'கோழியூர்' என்றும், மூக்கால் கொத்தியமையால் 'மூக்கீச்சரம்' என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இச்செய்தி சிலப்பதிகாரத்திலும் உள்ளது.
மூலவர் 'பஞ்சவர்ணநாதர்' என்ற திருநாமத்துடன் சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். உதங்க முனிவருக்கு ஐந்து காலங்களில் ஐந்து வண்ணமாகச் சிவபெருமான் காட்சி கொடுத்ததால் இப்பெயர் பெற்றார். நான்முகன் இத்தலத்திற்கு பூஜை செய்து வழிபட்டபோது இதேபோல் காட்சி கொடுத்ததாகவும் கூறுவர். அம்பாள் 'காந்திமதியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
கோச்செங்கட்சோழ நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் முக்தி பெற்ற தலம். மூவேந்தர்களும் வழிபட்ட தலம். 276 தேவாரத் தலங்களுள் மூவேந்தர்களும் வழிபட்டது உறையூரும், திருப்பரங்குன்றமும் தான்.
விஷ்ணு, பிரம்மா, உதங்க முனிவர், கருடன், காசியப முனிவரின் மனைவியான கத்ரு, அவர்களது மகனான கார்க்கோடகன், வேதங்கள் ஆகியோர் வழிபட்ட தலம். வைகாசி மாதம் விசாகத்தையொட்டி பிரம்மோற்சவம் நடைபெகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|